திருவிழா பார்க்கப் போனேன் அப்பா தோளில். திரும்பி வரும்வரை அதில் குதித்து ஆட்டம் போட்டது இன்றும் நினைவில் ஓடி வருகிறது.
அவர் போகும் இடமெல்லாம்... கோவில், பட்டிமன்றம், நூலகம், அரசியல் கூட்டம் என எல்லா இடத்திலும், ஒரு ஒற்றை விரல் பற்றி நானும் ஒட்டிக் கொண்டே போவேன்.
மடியில் உட்கார வைத்து, கதை சொல்லியபடி பிஞ்சு விரலில் மருதாணி இட்டுக் கொஞ்சுவார். அப்பாவின் முத்தத்துக்காகவே சமத்துக் குட்டியாய் இருப்பேன்....
"ஏந்தான் இப்படி இருக்கீங்களோ? நாளைக்கு ஆஃபீஸுல உங்க கையைப் பாக்கறவங்க என்ன நினைப்பாங்க?"
என அம்மா சத்தமாக ஒரு குரல் கொடுப்பாள்.
ஏனோ அவர் காதுகளுக்கு அது விழவே விழாது. இரு கை, கால்களிலும் மருதாணி வைத்து, தன் நெஞ்சில் படுக்க வைத்துத் தட்டுவார். அவரது மெல்லிய ரோமம் குறுகுறுக்கும்... அழுவேன்... ஓடிப்போய் சட்டை போட்டு வந்து, என்னை சாய்த்துக் கொள்ளும் அந்த மார்பு.
காலை எழுந்ததும், மருதாணியை அலம்பி, அதில் தேங்காய் எண்ணெய் வைத்து, என்னைக் குளிப்பாட்டி, தலைவாரிக் கட்டிக் கொஞ்சும் அப்பாவின் அந்த முரட்டு அரவணைப்புக்காகவே, அடிக்கடி மருதாணி கேட்டு அழுதது இன்றும் மறக்கவில்லை.
தம்பிக்கும் இதையெல்லாம் நான் செய்து மகிழ்வேன்.
ஆனால் தம்பிக்கு அம்மா காட்டும் அதீத செல்லத்தால் அம்மா எனும் சொல்லே மனதில் ஒட்டவில்லை...
வயதும் ஓடி வந்தது அப்பா போலவே எனையணைக்க. பருவமெய்தியவளை, தோட்டத்து தின்னையில் பச்சை ஓலைகட்டி ஒதுக்கி உட்கார வைத்தார்கள். வீடே ஒன்றாக, நான்மட்டும் தனியாக ஆனபோது,
அவர் மட்டும் கொல்லைப் புறமாக வந்து, யாரும் பார்க்கிறார்களா எனப் பார்த்து, அருகே வந்து கட்டி அணைத்தார். அந்த முரட்டு விரலின் பாசத்தில் வலிமறந்து பல்லைக் காட்டிச் சிரிக்கும் பச்சைக் குழந்தையானேன்.
"பயப்படாதே. பெரியவங்க பேச்சைக் கேட்டு நடந்துக்கோ. எது வேணும்னாலும் அப்பாட்ட கேளு.
உனக்கு பயமே கூடாது."
அவர் சொல்லின் தைரியத்தில், மூன்று நாளும் போனதே தெரியவில்லை. கல்லூரியில் கால் வைத்த போதும், தனியாக அமர்ந்து தலை தடவியது அதே முரட்டுக்கை.
"என்ன நடந்தாலும் அப்பாட்ட தைரியமாச் சொல்லு. மனசுல என்ன பட்டாலும் சரி, சந்தேகம் வந்தாலும் சரி, எங்கிட்ட கேளு.
அம்மா சொல் பேச்சு கேட்டு சமத்தா படிச்சு, நல்ல பெண்ணா நடந்துக்கணும். சரியா?"
ஏற்கனவே அவரிடம் கற்ற வாழ்க்கைப் பாடம், அனுசரணையான பாசம், மீண்டும் உள்ளே புதுத்தெம்பு எட்டிப் பார்த்தது.
ஒரு நாள் கல்லூரி முடிந்து, "அப்பா...." எனத் துள்ளி வந்த என்னை,
"ஷ்ஷ்.... மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்திருக்காங்க. சீக்கிரமா கொல்லை வழியா போய் குளிச்சுட்டு, ரூமுக்கு போ. சத்தம் வரக்கூடாது."
அம்மாவின் கண்டிப்பு சடாரென அடக்கி வைத்தது. பெண் பார்க்கும் படலத்தில் காஃபி கொடுக்கையிலும் நிமிர்ந்து பார்க்கப் பிடிக்கவில்லை மாப்பிளையை...
அடக்கி வைத்த பயத்தை, அடக்கம் என நினைத்து பச்சைக் கொடி காட்டிவிட்டது மாப்பிள்ளை வீடு. இரண்டே மாதத்தில் கல்யாணம்.
"எதுவானாலும் எங்கிட்ட கேளு...." எனச் சொன்ன அப்பாவிடம் ஒரு வார்த்தைகூடப் பேச நேரமில்லை. அத்தனை கல்யாண வேலை அவருக்கு.
மனவறையில் அவர் மடியில் அமர்ந்த நொடி, மீண்டும் நான் பூப்பெய்திய நாளை நினைவூட்ட, அவர் கரம் பட்டதும் கண்ணீர் ஓடிவந்து அவர் கையை அணைத்து நனைத்தது...
கணவன் வந்தும் அப்பா நினைவு மட்டுமே இருந்தது. தன்னிடம் ஒட்டாத வலியில் அவர் முகம் காட்டுவார்.
"விடுடா... சின்னக் குழந்தை தானே?
இப்பத்தானே கல்யாணம் ஆயிருக்கு? ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாகும்..."
என அவரை அதட்டும் மாமியாரை ஆச்சரியமாகப் பார்த்தேன். வேறு வழியால்லாமல், நான் மலடல்ல என நிரூபிக்க மட்டுமே குழந்தை ஒன்று பெற்றேன் மனமில்லாமல்...
அவள் பிறக்கும்வரை *அம்மா* எனும் சொல்லே கசந்தது.
பிறந்தும்கூட, அந்தப் பால்மணத்தை நான் பெரிதாக ரஸிக்கவில்லை... பிஞ்சு விரல்களைத் தொட்டுக் கொஞ்சவில்லை... அப்பாவும் அதற்கான இடமே தரவில்லை. அவர் மடியில் மீண்டும் அங்கே நானாய்.... நான் பெற்ற மகள்...
வாஞ்சையோடு அவளைத் தோளில் தூக்கி ஊர் சுற்றினார்... மருதாணி இட்டுவிட்டார்.
பள்ளிக்குக் கொண்டுவிட்டார். நரைத்த மார்பில் சட்டை போட்டு அவளைப் படுக்க வைத்தார். கதை சொல்லிச் சாதம் ஊட்டினார். தனியாக மடியில் உட்கார வைத்து, ஏதேதோ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்...
அவள் பிஞ்சுவிரல்களை அவர் பிடிக்கும் போதெல்லாம்,
அவள் அவரது முரட்டு விரல்களைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறாள்... தாத்தா நெஞ்சே அவளின் தலையணை ஆனது.
ஆனால் அவளுக்குப் பச்சை ஓலை கட்டும் முன்னே.... அவள் பிஞ்சு விரலைத் தொட்டுச் சிரித்தபடியே அந்த முரட்டு விரல் தளர்ந்தது. ... முரட்டு உடல் அமைதி கண்டது...
இப்போதும் நான் அம்மா ஆகவில்லை... அக்காவாகவே அவளைப் பார்த்தேன்...
"நீ கொஞ்சி விளையாடியது போல் இவள் விளையாடத் தம்பி வேண்டாமா?"
ஒரு முரட்டுக்கை வந்து கனவில் செவிட்டில் அறைந்தது.... பத்தே மாதத்தில் அவளும் பால்மணம் தவழும் அவள் தம்பியைக் கொஞ்ச ஓடிவந்தாள்.
பெரிய அறுவை சிகிச்சை ஆனதால் அந்தப் பால்மணத்தையும் நான் ரஸிக்கவில்லை... பிஞ்சு விரல்களைத் தொட்டுக் கொஞ்சித் தூக்க முடியவில்லை. பட்டுக் கன்னத்தில் முத்தமிடக்கூடத் தூக்கவில்லை.
எட்டு வயதான அவள், அவனைக் காலில் போட்டு, எண்ணெய் வைத்து உடலை நீவிவிட்டாள்...
இதம் பார்த்து வெந்நீராட்டி விட்டாள்.... மெதுவாகத் தூக்கித் தலை துவட்டி, பஞ்சுத்துணியால் அவனைச் சுற்றி, பாலூட்ட நீட்டினாள்....
பால் குடித்தவனைத் தோளிலிட்டுத் தட்டி, அவன்விட்ட எச்சிலை, எதுக்களித்த பாலை எல்லாம் மெதுவாகத் துடைத்து விட்டாள்....
அவளின் சூடான அணைப்பில் அந்தக் குட்டிப்பாப்பா தூங்கிப் போவான்.... ஒவ்வொரு நாளும் அவள் கையே பட்டுப் பட்டு.... பின் அவனுக்கு அவளே அம்மா ஆனாள்....
அவனுக்குப் பார்த்துப் பார்த்துச் சாதம் ஊட்டினாள்... பட்டு விரல் பிடித்து நடக்க வைத்தாள்...
பள்ளி நேரம் தாண்டி, நொடி நேரம் அவனைப் பிரியாது இருந்தாள்... தன் நெஞ்சில் அவனைப் படுக்க வைத்தாள்.... அவன் வளர்ந்தான்.... தன் மடியை அவன் தலையணை ஆக்கினாள்....
என் கை பட்டாலே அவன் கத்திக்கத்தி அழுவான்.... அதனால் தொடவே பயந்தேன்.... அவனை அள்ளி அணைத்து,
அவன் போன பள்ளியிலேயே அவளும் சேர்ந்தாள்... பாடம் சொல்லிக் கொடுத்தாள்.... பூப்பெய்தினாள்.... ஓடி வந்து என்னைத் தள்ளிவிட்டுத் தன் தம்பிக்குச் சமைத்தாள்.... எச்சில் ஒழுகும் வாயில் ஊட்டிவிட்டு, மிச்சத்தை உண்டாள்.
என் அப்பா போலவே, அவனைத் தனியாக மடியில் உட்கார வைத்து ஏதேதோ பேசினாள்.
அவள் மடியில் தினமும் ஒரு தலையாட்டி பொம்மையைப் பார்த்தேன். நான் பார்த்து அவன் தனியாக இருந்ததில்லை.... வளர்ந்தான்.... அவள் தோழியானாள்.... ஊர்க்கதை எல்லாம் அவளிடம் பேசினான்.... வீட்டிற்கு வருபவர்,
"அம்மா இல்லையா தம்பி?"
எனக்கேட்டால் அவளிடம் ஓடிப்போய்,
"அக்கா.... உன்னை யாரோ கூப்படறா...."
என்றான். 'சுருக்'கெனத் தைத்தது எனக்கு.
"டேய்.... உனக்கு அம்மா யாருடா?"
என நான் கேட்டதும், அக்காவைப் பார்த்துவிட்டு அமைதியாகத் தலை குணிந்து நின்றான். அப்போதுதான் கவனித்தேன்.... *அம்மா* என்பதன் அர்த்தத்தை. வயதாக ஆரம்பித்தது....
அன்றுதான் எனக்கும் அம்மா கிடைத்தாள். அதுமுதல் அவளை *அம்மா* என்றே வாயார அழைக்கிறேன்....
மகன் வளர வளர.... மீண்டும் என் அப்பாவைப் பார்த்தேன். அந்த முரட்டுக் கைக்காகக் காத்திருந்தேன். நான் மீண்டும் குழந்தை ஆனேன்.... அவன் வீட்டிற்குள் நுழைந்தால்,
ஓடிப்போய் அவன் விரைலைப் பிடித்துக் கொண்டேன். கடைக்குப் போக வேண்டும் என காரணம் சொல்லி, அவன் முரட்டுக்கை பிடித்துக் குழந்தையாய் அவனோடு போனேன்.
'தலை வலிக்கிறது' எனச்சொல்லி, அவன் மடியில் தலைசாய்த்தேன். கண்கள் மூடினால், அப்பா வந்து தலையை வருடினார். விழித்துப் பார்த்தால் அங்கே மகன்.
மெல்ல என் உடல் தளர்ந்தது. இருவருடைய வாழ்க்கையும் நன்கு அமைந்து, அழகாகப் போய்க் கொண்டிருக்கிறது. வருஷம் இருமுறை ஒன்று சேர்வோம். அன்று என் பேரன் பேத்திகளைக் கண்டு துள்ளிக் குதிப்பேன்.
பலநாள் எண்ணிப் பார்த்திருக்கிறேன் என்னை...
**குழந்தையாய் அப்பாவிடம் அனுபவித்திருக்கிறேன்.
அக்காவாய் தம்பியிடம் அனுபவித்திருக்கிறேன்.
தோழியாய் மகளிடம் அனுபவித்திருக்கிறேன்.
மகளிடம் அம்மாவை அனுபவிக்கிறேன்.
மீண்டும் மகனிடம் அப்பாவை அனுபவிக்கிறேன்.
*ஆனால் நான் அம்மாவாய்??*
இந்த ஏக்கத்தில் தளர்ந்த மனது ஏனோ உடலையும் தளர்த்தி விட்டது.
இன்று மெல்லிய மூச்சுடன் என் இறுதிப் பயணத்தை நோக்கி நான்.... சுற்றிலும் யாராரோ வந்து பேசுகிறார்கள். காதுகளில் அவை ஏறவேயில்லை. என் இரு கைகளும் இரு ஸ்பரிஸத்துக்காகக் காத்திருக்கின்றன....
மனம் முரட்டுக் கைகளிலும், வாய் 'அம்மா' என மெல்லிய ஓசையிலும் மட்டுமே நிற்கின்றன.
சலசலவென வாசலில் ஓசை. எனக்குத் தெரியும்.... அந்த ஸ்பரிஸங்கள் இல்லாமல் உயிர் பிரியாதென்று. அது அந்த முரட்டுக்கைகக்கும், அம்மாவுக்கும் கூடத் தெரியும்...
ஓடிவந்து இருபுறமும் அவை என் விரல்களைக் கோத்தன... மெல்லியதாய் சிரிக்கிறேன்.....
"குண்டூ..... பசிக்கறதாடி..... பால் தரவா?"
அழுகையை அடக்கியபடி அம்மா பாலை நீட்டுகிறாள்....
'தலை வலிக்கறதாடி குண்டூ.... என் மடியில படுத்துக்கறியா?"
சிரிக்க முயன்றபடி அப்பா என்னைத் தன் நெஞ்சில் சாய்க்கிறார்....
இருகைகளாலும் ஒரு உத்ரணி பால் உள்ளே போனது. இதோ... சிரிக்கிறான் அங்கே கண்ணன் கண் சிமிட்டியபடி வானில்....
"அம்மா அப்பா ரெண்டும் கிடைச்சுதா.... போகலாமா...." என்பது போல்...
யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம்... இப்படி ஒரு குழந்தை தன் இறுதிக் காலத்தில் தான் பெற்ற பெற்றோர் மடியில் போவது....
மனம் நிறைந்து கண்கள் அவர்களிடம் இதைப் பேசியபடி மூடுகின்றன....
*வருகிறேன்.... முடிந்தால் மீண்டும் உங்களுக்குப் பேரனாய் அல்லது பேத்தியாய்...*
🍁வாஸவி நாராயணன்🍁